top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

விவசாயக் கண்காட்சி தொடங்கும் வேளை பாரிஸ் நோக்கி ட்ராக்டர்கள் பேரணி

மக்ரோன் பங்குபற்றும்

தொடக்க வைபவத்தை

உழவர்கள் தடுக்கக்கூடும் ?


பாரிஸ், பெப்ரவரி, 23


பாரிஸில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி(Salon de l'Agriculture,) இந்தத் தடவை நாட்டில் விவசாயிகளது கிளர்ச்சியினால் பதற்றத்தின் மத்தியில் நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பாரிஸில் போர்த் து வேர்சாய் கண்காட்சி அரங்கில் (Parc des Expos de Paris Porte de Versailles) மார்ச் 3ஆம் திகதி வரை நீடிக்கின்ற இக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வருகைதரவுள்ளனர்.


இந்தக் கண்காட்சி சமயத்தில் தங்களது வாகனப் பேணிப் போராட்டத்தைப் பாரிஸ் நோக்கி மீண்டும் ஆரம்பித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு விவசாய அமைப்புகள் தயாராகியுள்ளன.


அண்மைக் காலமாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற கிராமப் புற விவசாயிகளது ஒருங்கிணைப்புக் குழுவின் கொடிகள் தாங்கிய சுமார் 50 ட்ராக்டர்கள் இன்று வெள்ளிக்கிழமை மிக அமைதியான முறையில் பாரிஸ்

நகரின் மையப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளன.


நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேலும் சில வாகனப் பேரணிகள் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.


உள்நாட்டு உளவு அமைப்புகள் அரசுக்கு வழங்கிய ரகசியத் தகவலின்படி கண்காட்சி நடைபெறும் வேளை அங்கு வருகை தருகின்ற முக்கிய அரசியல்பிரமுகர்களை வழிமறிப்பதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அதிபர் மக்ரோன் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சனிக்கிழமை அங்கு வருகை தருவதை விவசாயிகள் இடைமறிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பாரிஸ் செய்தி ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது.


கண்காட்சி நடைபெறும் சமயத்தில் விவசாயிகள் சமூகத்தில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் பெரும் விவாதம் ஒன்றை நடத்தப் போவதாக அதிபர் மக்ரோன் அழைப்பு விடுத்திருக்கிறார்.

நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற FNSEA என்ற விவசாயிகள் தொழிற்சங்கம்

அதிபரது அழைப்பை ஏற்க மறுத்து நிராகரித்துள்ளது.

போதிய வருமானம் இன்மை, இறக்குமதியாகும் விவசாய உற்பத்திகளால் ஏற்பட்டுள்ள கடும் போட்டி, ஐரோப்பிய மட்டத்திலான சட்டங்கள், கட்டுப்பாடுகள் ஆகிய காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசு உதவிகளைக் கோருகின்ற விவசாயிகள், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பாரிஸ் நகரைச் சுற்றிவர வீதிகளில் தடைகளை ஏற்படுத்தித் தலைநகரை முடக்கும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தமை தெரிந்ததே.


நாடெங்கும் விவசாயிகளது கிளர்ச்சியால் பெரும் அழுத்தங்களைச் சந்தித்த அரசு அவர்களது சீற்றத்தைத்

தணிப்பதற்காக 400 மில்லியன் ஈரோக்கள் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உதவித்திட்டங்களை உடனடியாக

அறிவித்திருந்தது. பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி இருந்தது.


வாக்குறுதிகளை உடனடியாகச் செயலில் காட்டுமாறு விவசாய அமைப்புகள் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

23-02-2024


0 comments

コメント


You can support my work

bottom of page