top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

வீஸா இல்லாத வெளிநாட்டுத் தொழிலாளருக்கு வதிவிட அனுமதி, சட்டத்தில் ஏற்பு!

புதிய குடியேற்ற சட்டம்

நடைமுறைக்கு வந்தது

அரசிதழில் வெளியீடு


நாட்டின் வலதுசாரிகள்

அரசமைப்புச் சபையின்

தீர்ப்பினால் கொதிப்பு!


பாரிஸ், ஜனவரி, 27


அரசமைப்புச் சபையினால் திருத்தியும் நீக்கியும் தணிக்கை செய்யப்பட்ட புதிய குடியேற்றச் சட்டத்தை அதிபர் மக்ரோன்

நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்குப் பிரகடனப்படுத்தியிருக்கிறார். நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் தங்கியிருந்தவாறு அவர் அதற்கான பிரகடனத்தை (promulgué) வெளியிட்டிருக்கிறார்.


அதிபரது பிரகடனத்தை அடுத்துப் புதிய சட்டம் இன்று சனிக்கிழமை அரசிதழில் (Journal official) வெளியிடப்பட்டிருக்கிறது.


நாட்டில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகின்ற உணவகம், கட்டடவேலை போன்ற சில தொழில் துறைகளுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமர்த்துவதற்காக அத்தகையோருக்குக் குறுகியகால - தற்காலிக வதிவிட அனுமதி - வழங்குவது உட்பட வீஸா இல்லாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் (travailleurs sans papers) வீஸா பெற்றுக்கொள்வதை இலகுவாக்கின்ற விதிகள் இந்தச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயம் வதிவிட அனுமதி மறுக்கப்பட்டவர்களைத் திருப்பி அனுப்புகின்ற நடைமுறைகளையும் புதிய சட்டம் விரைவுபடுத்துகிறது.


சர்ச்சைக்குரிய இந்தப் புதிய குடியேற்றச் சட்டத்தில் இடம்பெற்றிருந்த- வெளிநாட்டுக் குடியேறிகளைப் பெரிதும் பாதிக்கின்ற - பல்வேறு சரத்துப் பிரிவுகளை (articles)

நாட்டின் அரசமைப்புச் சபை தனது பரிசீலனையில் நீக்கித் தணிக்கை செய்திருப்பது வாசகர்கள் அறிந்ததே.


அரசமைப்புச் சபை நீதிபதிகளால் பரந்துபட்ட அளவில் தணிக்கை செய்யப்பட்ட புதிய சட்டத்தையே அதிபர் மக்ரோன் இப்போது நடைமுறைக்கு அறிவித்திருக்கின்றார்.


நாட்டில் அமுலில் உள்ள மனித உரிமைச் சட்டங்களுக்கும் அரசமைப்பின் விதிகளுக்கும் பொருந்தாதவை, அவற்றை மீறுபவை என்று தெரிவித்தே சுமார் 34 சரத்துக்களை முழுமையாகவும் பகுதி அளவிலும் அது நீக்கியிருக்கிறது. அவ்வாறு நீக்கப்பட்ட சரத்துகள் அனைத்துமே நாட்டில் செல்வாக்குப் பெற்றுவருகின்ற தீவிரவாத வலதுசாரிக் கட்சியின் ஆதரவோடு வலதுசாரிகளால் சட்ட மூலத்தில் உள்நுழைக்கப்பட்டிருந்தவை ஆகும். பெரும்பான்மை பலம் இல்லாத மக்ரோனின் அரசு வலதுசாரிகளது கடும் அழுத்தங்கள் காரணமாக வெளிநாட்டவர்களைப் பாதிக்கின்ற கடுமையான பல விதிகள் சட்டத்தில் இடைச் செருகப்பட்டதை அனுமதிக்கின்ற கட்டாயம் ஏற்பட்டது.


இப்போது அவ்வாறான சட்ட விதிகளை அரசமைப்புச் சபை நீக்கி இருப்பது தீவிர வலது மற்றும் வலதுசாரிப் பழமைவாதத் தலைவர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசமைப்புச் சபையின் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்து கருத்துகள் வெளியாகியிருக்கின்றன.


அதிபர் மக்ரோனின் ஆதரவுடன் அரசமைப்புச் சபையின் நீதிபதிகள் நாட்டில் நடத்திய "சதிப் புரட்சி" இது என்று மரின் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிக் கட்சி காரசாரமான கருத்தை வெளியிட்டுள்ளது.


நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் வெளிநாட்டுக் குறியேறிகளைக் குறைக்க விரும்புகின்ற பிரெஞ்சு மக்களது கருத்துக் கணிப்பாக இருக்கும் என்று

தீவிர வலதுசாரித் தலைவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

27-01-2024

0 comments

Comments


You can support my work

bottom of page