top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

வயலில் வைக்கோல் உருளைகளினுள் குழந்தை எமிலைத் தேடிச் சோதனை!

ஓநாய் அல்லது கழுகினால்

தூக்கிச் செல்லப்பட்டானா?

சாத்தியங்கள் நிராகரிப்பு!!


பிரெஞ்சு அல்ப்ஸ் பிராந்தியத்தில் வெர்னே (village de Vernet-Alpes-de-Haute-Provence)என்ற கிராமத்தில் கடந்த எட்டு நாட்களாகத் தேடப்படும் எமில் என்ற இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு என்ன நடந்தது என்பது பெரும் மர்மமாக உள்ளது.


சம்பவம் நடந்த பகுதியில் களத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும் தேடுதல் பணி நிறுத்தப்பட்டுவிட்ட போதிலும்

பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள்

வெவ்வேறு கோணங்களில் தரவுகளைச் சேகரித்து வருகின்றனர்.

வேர்னே கிராமத்தில் வசிக்கின்ற வர்கள் தவிர வெளியாட்கள் எவரும் அங்கே செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. தங்களது குழந்தைகள் மீது மிகுந்த அவதானமாக இருக்குமாறு கிராமப் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அங்குள்ள தேவாலயம் ஒன்றில் எமிலின்

குடும்பத்தினர் கத்தோலிக்க மதப் பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.


இதுவரை சாட்சிகள் உட்பட 35 பேர்வரை விசாரிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் விசாரணையை நகர்த்திச் செல்வதற்கான முயற்சிகள்நடைபெறுகின்றன.


குழந்தையை ஓநாய் அல்லது கழுகு போன்ற பறவைகள் தூக்கிச் சென்றிருக்குமா என்பதற்கான சாத்தியங்களை விசாரணையாளர்கள்

நிராகரித்துள்ளனர். ஆனால் எமில்

வயல்களில் விவசாய இயந்திரங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

தானிய வயல்கள் நிறைந்த அந்தப் பகுதியில் இப்போது அறுவடைக் காலம். எனவே விவசாயிகள் வைக்கோல் உருளைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைக்கோல் உருளைகள் பிரெஞ்சு மொழியில் "ballots de paille " என்று அழைக்கப்படுகின்றன. கோடைகாலங்களில் வயல்வெளி எங்கும் அவற்றைக் காணமுடியும். வைக்கோலைப் பாரிய இயந்திரத்தின் உதவியுடன் நசித்து மிகப் பெரும் உருளைகளாகக் கட்டிவைத்துக் குளிர் காலத்தில் கால்நடைத் தீவனம் மற்றும் தேவைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம்.

வைக்கோலைக் கற்றைகளாக உள் இழுத்து பாளங்களாக்கிப் பாரிய உருளை வடிவில் சுருட்டிக் கட்டுகின்ற இயந்திரங்களில் மனிதர்கள் சிக்கிக் காயமடைகின்ற சம்பவங்கள் வயல் கிராமங்களில் இடம்பெறுவதுண்டு.

மான் போன்ற சிறிய விலங்குகளும் அவற்றில் சிக்குவதுண்டு.

காணாமற்போன குழந்தை எமிலும் கண்காணாத விதத்தில் இயந்திரத்தில் சிக்கி நசியுண்டு வைக்கோல் கற்றைகளுக்குள் மறைந்துபோயிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவற்றைச் சோதிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இராணுவத்தின் மிகத் துல்லியமான சோதனைக் கருவி(ultra-precise detector) வரவழைக்கப்பட்டுச் சகல வைக்கோல் உருளைகளும் அதன் ஊடாகச் செலுத்தப்பட்டுப்

பரிசோதிக்கப்படுகின்றன.


கிராமத்தில் குழந்தை காணாமற்போன சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல மொபைல் தொலைபேசி உரையாடல்களின் முழுத் தரவுகளும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. அந்தப் பிரதேசத்துக்கு வந்துசென்ற வாகனங்களது விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.


எமிலைத் தொலைத்த துயரில் இருந்து வெளியே வருவதற்கான வழி எதுவும் தென்படவில்லை என்று வெர்னே கிராமவாசிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.


⚫முன்னர் வந்த செய்தி இணைப்பு


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

17-07-2023

0 comments

Comments


You can support my work

bottom of page