எங்கே, எப்போது, என்ன
வெடிக்கும் என்ற அச்சம்!
புதிய அத்தியாயம்
என்கிறது இஸ்ரேல்!
பாரிஸ், செப்ரெம்பர் 18
லெபனானின் தலைநகரிலும் இதர இடங்களிலும் வோக்கி - ரோக்கி(walkie-talkie) தொடர்பாடல் கருவிகள் திடீரென வெடித்துப் பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர், 450 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்று நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெடிப்புகள் நடந்த இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை
எச்சரித்துள்ளனர். வோக்கி - ரோக்கிகள் மட்டுமன்றி வேறு சில இலத்திரனியல் கருவிகளும் வெடித்துள்ளன என்று தகவல்கள் வருகின்றன. சூரிய மின்கலங்களும் அவற்றில் அடங்கும்.
நேற்றைய தினம் பேஜர் தொடர்பாடல் கருவிகள் தொடராக வெடித்துச் சிதறி ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் இன்று இரண்டாவது நாளாக இந்தப் புதிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஹிஸ்புல்லா உறுப்பினர்களது பயன்பாட்டில் இருந்த
வோக்கி - ரோக்கி கருவிகளே திடீரென வெடித்துள்ளன. நேற்று நடந்த பேஜர் வெடிப்பில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவரது மரணச் சடங்கு இன்று நடைபெற்ற வேளை அங்கு கூடியிருந்தோர் மத்தியில் முதலாவது வோக்கி - ரோக்கி வெடித்தது. அதில் பலர் காயமடைந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. தொடர்ந்து வேறு பல இடங்களிலும் வோக்கி - ரோக்கிகள் வெடித்து அழிவுகளை ஏற்படுத்தின. இதனால் அங்கு பதற்றமும் பீதியும் அதிகரித்துள்ளது. எங்கே எப்போது என்ன பொருள் வெடித்துச் சிதறுமோ என்ற அச்சம் மக்களைப் பற்றியுள்ளது.
செவ்வாய்க்கிழமை பேஜர்கள் வெடித்த சம்பவங்களில் காயமடைந்த சுமார் மூவாயிரம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இரண்டு சிறுவர்கள் உட்படப் பன்னிருவர் இந்த வெடிப்புகளால் உயிரிழந்திருந்தனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய ஹிஸ்புல்லா இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆவர். அந்த இயக்கம் பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கடந்த ஆண்டு மொபைல் தொலைபேசிப் பாவனையைத் தடைசெய்திருந்தது. தங்களுடைய நிர்வாகத் தொடர்பாடல்களுக்கு கையடக்கப் பேஜர்களைப் (pagers) பயன்படுத்தத் தொடங்கியிருந்தது.
அவ்வாறு பாதுகாப்பு உத்தரவாதத்துடன் பயன்படுத்தப்பட்டுவந்த பேஜர்களே
தொடராகப் பட்டாசு போன்று வெடித்துச் சிதறியுள்ளன. உலகை வியப்புக்குள்ளாக்கிய இந்த வெடிப்புகள் தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன.
ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லா இயக்க உறுப்பினர்கள் சண்டையோ தாக்குதலோ ஏதுமேயின்றி நின்ற நின்ற இடங்களில் காயமடைந்து வீழ்ந்திருக்கிறார்கள். உலகப் பாதுகாப்பு வல்லுநர்களை மட்டுமன்றி சாதாரண மக்களையும் இந்தக் காட்சிகள் வியப்புக்குள்ளாக்கியிருக்கின்றன.
கையடக்கமாகப் பயன்படுத்தக் கூடியவை என்றாலும் ஸ்மார்ட் போன்களைப் போன்ற தொழில்நுட்ப வசதிகள் பேஜர்களில் கிடையாது. இரண்டு பேரிடையே அல்லது ஓர் இயக்கக் குழுவினரிடையே வரையறுக்கப்பட்ட செய்திகளைப் பரிமாறிக் கொள்ள மட்டும் பயன்படத் தக்கவை. அதில் புதிய செயலிகள் எதனையும் இணைக்க முடியாது. வேறு தரப்புகளால் அணுகவோ, அல்லது ஊடுருவுவதற்கோ இயலாதவை. மூன்றாவது தரப்பை இணைத்துக் கொள்ளக்கூடிய வலையமைப்பை
அதன்மூலம் செயற்படுத்த முடியாது.
ஹிஸ்புல்லா இயக்கம் தரம் குறைந்த சுமார் 5 ஆயிரம் பேஜர் கருவிகளைத் தைவானைச் சேர்ந்த கோல்ட் அப்போலியோ (Gold Apollo) என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கியிருந்தது என்று கூறப்படுகிறது.
அத்தகைய கருவிகள் எவ்வாறு வெடித்துச் சிதறின?
பொதுவாகச் சில இலத்திரனியல் கருவிகள் அவற்றின் பற்றரிகள் சூடேறுவதன் மூலம் வெடித்துச் சிதறுவ துண்டு. ஸ்மார்ட் போன்கள் சில சமயங்களில் அவ்வாறு சூடேறி வெடித்த சம்பவங்கள் மிக அரிதாக நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான பேஜர்களின் பற்றரிகள் ஒரே சமயத்தில் சூடாகி அவை வெடித்துச் சிதறுவது அசாத்தியம். இந்த வெடிப்புகளுக்கு பற்றரிகளே காரணம் என்ற கருதுகோளைப் பாதுகாப்பு நிபுணர்கள் அடியோடு நிராகரிக்கின்றனர்.
பேஜர்களுக்கு உள்ளே மறைத்து வைக்கப்பட்ட சக்தி மிக்க வெடிமருந்தே
அவற்றைச் சிறிய வெடிகுண்டுகளாக மாற்றியிருக்க வேண்டும். குறைந்தது 20 கிராம் வெடி மருந்து கருவியின் உள்ளே அதன் ஒரு சிறு பகுதி போன்ற உதிரிப்பாகமாக மறைத்துப் பொருத்தப்பட்டிருந்திருக்க
வேண்டும்.
-வெடிகுண்டுகள், மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய விசேட நிபுணர்கள் இவ்வாறு உறுதியாக நம்புகின்றனர்.
இஸ்ரேலிய மொசாட் உளவுப் படை சத்தம் சந்தடியின்றி ஒர் அதி உயர் - ஹை-ரெக் - தொழில்நுட்பப் போரை
லெபனானில் பரீட்சித்துப்பார்த்திருக்கிறது. அது பெரு வெற்றியளித்திருக்கிறது என்பதைப்
பாதுகாப்பு வல்லுநர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகின்றனர்.
ஹிஸ்புல்லா இயக்கம் ஏற்கனவே இதனை உறுதிப்படுத்தி உள்ளது. இஸ்ரேலிய உளவாளிகள் தமது பேஜர்களுக்குள் வெடிமருந்தைச் செருகி ரகசியக் கடவுச் செய்தி மூலம் அவற்றை வெடிக்கச் செய்துள்ளனர் என்று அது குற்றம் சுமத்தி உள்ளது.
இந்தக் கருவிகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் அல்லது விநியோக இடை மையங்களில் வைத்து அவற்றின் உள்ளே சிறிய குண்டுகள் செலுத்தப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
லெபனானை நிலைகுலைய வைத்துள்ள இந்த வெடிப்புகள் தொடர்பில் இஸ்ரேல் மௌனம் பேணி வந்தாலும் "போரில் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறந்துள்ளதாக" அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு பூடகமாகத் தெரிவித்திருக்கிறது.
அதேசமயம் லெபனான் நிலைமை விபரீதமாக மாறி வருவதை அடுத்து ஐ. நா. பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டம் விரைவில் கூட்டப்படவுள்ளது.
⚫முன்னர் வந்த செய்தி https://www.thasnews.com/post/ல-பன-ன-ல-க-யடக-க-ப-ஜர-கள-வ-ட-த-த-ச-ச-தற-2-750-ப-ர-க-ய
தாஸ்நியூஸ் - பாரிஸ்
18-09-2024
Comments