இஸ்ரேல் உரிமை கோரல்
போர் நிறுத்தம் நிராகரிப்பு
பெய்ரூட் மீது குண்டு வீச்சு
பாரிஸ், செப்ரெம்பர் 28
பெய்ரூட் மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் அதி உயர் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்
(Hassan Nasrallah) கொல்லப்பட்டார் என்று இஸ்ரேலிய இராணுவம் அறிவித்திருக்கிறது. இது குறித்து ஹிஸ்புல்லா இயக்கத்தின் தரப்பில் இருந்து எந்தவித தகவல்களும் இன்னமும் வெளியாகவில்லை.
பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் டாஹியா(Dahieh) என்ற இடத்தில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் மத்திய கட்டளைத் தலைமையகம் மீது இரவு நேரம் இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதலிலே அவர் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
லெபனானில் தலைநகர் பெய்ரூட்டில்
பல இடங்களில் பெரும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் கட்டடங்கள் தகர்ந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை
மீட்கும் பணிகள் பெருமெடுப்பில் நடைபெற்று வருகின்றன. வெளியேறிச் செல்லும் மக்கள் கூட்டத்தின் நெரிசலால் தாக்குதல் நடந்த இடங்களைச் சென்றடைவது தாமதமாகியிருப்பதாக அம்புலன்ஸ் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே பெய்ரூட் நகரில் முக்கிய இலக்கு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாஹ்
கொல்லப்பட்டார் என்று இஸ்ரேலியப் படைகளின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹேர்ஸி ஹலேவி (Herzi Halevi) இன்று அறிவித்திருக்கிறார். ஹசன் நஸ்ரல்லாவோடு லெபனானின் தென்பகுதிப் போர் முனைக்குப் பொறுப்பான ஹிஸ்புல்லாத் தளபதி உட்படப் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இஸ்ரேல் உரிமைகோரியிருக்கிறது.
ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராகக் காஸா மீது பெரும் போரை நடத்தி வந்த இஸ்ரேல், இப்போது தனது மற்றொரு எதிரியான லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தின் மீது அந்த நாட்டுக்குள்ளேயே மோதலைத் தொடக்கியுள்ளது. லெபனானுக்குள் தரைவழியாக முன்னேறுகின்ற நோக்கத்துடன் அங்குள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது வான் வழித் தாக்குதல்களை நடத்திவருகின்றது.
எல்லைதாண்டிய மோதலை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.
லெபனானுக்குள் அண்மைக்காலத்தில் இஸ்ரேல் உரிமை கோராமல் நடத்திய பல தாக்குதல்களில் ஹிஸ்புல்லா இயக்கம் அதன் முக்கிய தளபதிகளை இழந்திருந்தது. எனினும் ஈரானிய ஆதரவு பெற்ற அந்த இயக்கத்தின் தலைவர் இஸ்ரேலியத் தாக்குதலில் சிக்குண்டார் என்ற தகவல் பிராந்தியம் முழுவதிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
⚫தொடர்புடைய செய்தி :https://www.thasnews.com/post/ல-பன-ன-க-க-ள-தர-வழ-ய-க-நகர-இஸ-ர-ல-யப-பட-ஆயத-தம-க-றத
தாஸ்நியூஸ் - பாரிஸ்
Comments