top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ஹமாஸ் தலைவரை தெஹ்ரானில் தாக்கி கொன்றது இஸ்ரேல்!

ஏவுகணையினால்

குறிவைக்கப்பட்டார்


ஹிஸ்புல்லா தளம் மீதும்

பெய்ரூட்டில் குண்டு வீச்சு

பரந்துபட்ட போர் ஆபத்து!!


பாரிஸ், ஜூலை 31


பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ராணுவப் பிரிவாகிய ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹானியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டிருக்கின்றார். ஈரானியத் தலைநகராகிய தெஹ்ரானில் இஸ்ரேல்

நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகின்ற

ஒரு தாக்குதலில் அவரும் அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரும்

உயிரிழந்திருப்பதை ஹமாஸ் இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது..தாக்குதலில்

மேலும் சிலர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


தெஹ்ரான் நேரப்படி அதிகாலை இரண்டு மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.


லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர்கள் தங்கியிருந்தனர் எனக் கூறப்படுகின்ற ஏழு மாடிக் கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேலின் தாக்குதல் நடந்த சிலமணி

நேரத்துக்குப் பின்னர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது எனினும் பெய்ரூட் தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை.


தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தனிப்பட்ட வீட்டில் தங்கியிருந்த சமயத்திலேயே தலைவர் ஹானியே இஸ்ரேலின் இலக்கில் சிக்கிப் பலியாகியிருக்கிறார். ஈரானில் புதிதாகத் தெரிவாகிய அதிபர் மசூத் பெஷெஸ்கியனின்(Masoud Pezeshkian)

பதவியேற்பு வைபவத்தில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கே தங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. தூரத்தில் இருந்து இலக்கை நோக்கி வழிநடத்தப்படக் கூடிய நவீன ஏவுகணை மூலமே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று சவுதி அரேபிய செய்தி நிறுவனம ஒன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இந்தத் தாக்குதலுக்கு இன்னமும் உரிமைகோரவில்லை. ஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்திய பெரும் தாக்குதலை அடுத்து அதற்குப் பொறுப்பான ஹமாஸ் தலைவர்களை ஒழித்துக்கட்டப் போவதாக அது சூளுரைத்திருந்தமை தெரிந்ததே.


ஈரானிய ஆதரவு பெற்ற ஹமாஸ் தலைவர் அந்த நாட்டின் தலைநகரில் வைத்தே கொன்றுபோடப்பட்டிருப்பது

பிராந்தியத்தில் பலத்த அதிர்வுகளையும் உணர்வலைகளையும் ஏற்படுத்தி

உள்ளது. அதேவேளை பிராந்தியத்தில் போர் பரந்துபட்ட அளவில் விரிவடைகின்ற ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இஸ்ரேல் இந்தத் தாக்குதலுக்காக அதிக விலை கொடுக்க நேரிடும் என்று ஈரானியப் புரட்சிக் காவல் படையின் முன்னாள் தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார். அதேசமயம் ஈரானியப் பாதுகாப்புப் பிரிவுகளுடன் தொடர்புடைய ஈரானிய செய்தி நிறுவனமாகிய நூர்நியூஸ்(Nournews) இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் "தெஹ்ரானின் பலத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒர் ஆபத்தான சூதாட்டம்"

என்று விளித்துள்ளது.

படம் :ஈரானிய ஆன்மீகத் தலைவர் அலி கமேனியுடன் இஸ்மாயில் ஹானியே.


ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தலைவர் ஹானியேயை "பெருமைக்குரிய போராளி" என்று வர்ணித்திருக்கிறார். "அவரது இரத்தம் வீணாய்ப் போகாது" என்றும் சூளுரைத்துள்ளார்.


ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் ஹானியேயின் படுகொலையை ரஷ்யா கடுமையாகக் கண்டித்திருக்கிறது. சீனாவும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

31-07-2024





0 comments

Commentaires


You can support my work

bottom of page