அந்த இயக்கத்துக்கு
பேரிடியான இழப்பு!!!
பழிதீர்த்தது இஸ்ரேல்
பாரிஸ், ஒக்ரோபர் 17
ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தூணாக விளங்கிய அதன் தலைவர் யாஹ்யா சின்வாரைக்(Yahya Sinwar) கொன்று விட்டதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இஸ்ரேலுடன் நீடித்துவரும் போரில் ஹமாஸ் இயக்கம் சந்திக்கின்ற பேரிடியான பின்னடைவு இது என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.
எனினும் ஹமாஸ் இயக்கம் இன்னமும் இதனை உறுதிசெய்யவில்லை.
காஸாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட ஒரு தாக்குதலிலேயே யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். காஸாவின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் உயர்தலைவர்கள் மக்களோடு மக்களாக மறைந்துள்ள இடம் ஒன்றை உளவுத் தகவல்கள் மூலம் அறிந்துகொண்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. ஆரம்பத்தில் பற்களின் வரிசை மூலம் சின்வாரின் உடல் அடையாளம் காணப்பட்டது என்றும், பின்னர் கைரேகை மூலம் அது உறுதிசெய்யப்பட்டது என்றும் இஸ்ரேலியப் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர். சின்வார் சிறையில் இருந்த சமயம் அவரது மரபணு உட்பட ஆள் அடையாளங்களை இஸ்ரேல் சேமித்திருந்தது என்று கூறப்படுகிறது.
யாஹ்யா சின்வார் காஸா நகரமாகிய கான் யூனிஸில் (Khan Younis) அகதி முகாம் ஒன்றில் 1962 இல் பிறந்தவர். 1987 இல் தொடங்கப்பட்ட ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக விளங்கினார். அந்த நாட்களில் இஸ்ரேலுக்குத் தகவல் கொடுப்பவர்களைத் தேடி அழிக்கின்ற
ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாகச் செயற்பட்டிருந்தார். 1980களில் இஸ்ரேலியப் படைகளால் கைதுசெய்யப்பட்ட அவர் காஸாவில் இஸ்ரேலிய உளவாளிகள் 12பேரைக் கொன்றதை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
22 ஆண்டுகளை இஸ்ரேலியச் சிறையில் கழித்தவர் சின்வார். 2011இல் ஒரு கைதிகள் பரிமாற்றத்தின் மூலம் விடுதலையானவர்.
ஹிஸ்புல்லா இயக்கத்தைப் போன்றே ஹமாஸ் அமைப்பும் ஒன்றன் பின் ஒன்றாக அதன் தலைவர்களைப் போரில் இழந்துவருகிறது.
ஒக்ரோபர் 7, 2023 இல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரும் தாக்குதலின் மூளையாகச் செயற்பட்டவர் என்று தேடப்பட்டுவந்தவர் யாஹ்யா சின்வார். கடந்த ஜூலை 31 ஆம் திகதி
இயக்கத்தின் அரசியல்ப்பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹானியே (Ismail Haniyeh) தெஹ்ரானில் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் அவரது இடத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கத் தீவிரவாதிகள் இஸ்ரேலிய எல்லைதாண்டி நுழைந்து நடத்திய பெரும் அதிரடித் தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதும், பல நூறுபேர் பணயக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டமையும் வாசகர்கள் அறிந்ததே. அதனை அடுத்தே இஸ்ரேலியப் படைகள் காஸா மீது பெரும் போரைத் தொடுத்தன.
உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒக்ரோபர் 7 தாக்குதலைத் திட்டமிட்டவர் என நம்பப்பட்ட சின்வாரைத் தேடி அழிப்போம் என்று இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் சூளுரைத்திருந்தனர். அதன்படி அவரை இலக்குவைத்துப் பழிதீர்த்திருக்கிறது இஸ்ரேல்.
இதேவேளை -
சின்வாரின் மரணம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்று ராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருப்பது காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து விடாது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு தெரிவித்திருக்கிறார்.
⚫தொடர்புடைய செய்தி :https://www.thasnews.com/post/ஹம-ஸ-தல-வர-த-ஹ-ர-ன-ல-த-க-க-க-ன-றத-இஸ-ர-ல
தாஸ்நியூஸ் - பாரிஸ்
17-10-2024
Comments